Tuesday, 17 January 2017

ஜல்லிக்கட்டும் நம் ஆதரவும்.

தமிழக இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் ஒரு புதுமை. இந்த போராட்டத்தில் நான் பங்கு பெறாமல் போனதற்கு வெட்கி தலை குனிகிறேன்.
ஆனால் இந்த சமயத்தில் ஏதேனும் தவறான செய்தி பரப்பப்பட்டால், அதன் உண்மை தன்மை ஆராயாமல் பகிர வேண்டாம்.
அதே சமயம் இணையத்தில் வந்த சில விஷயங்கள் கவனிக்க வேண்டியவை. இவைகள் மூலமும் நம் ஆதரவை காட்டலாம்.
* வெளிநாட்டு பானங்களை அருந்தாமல் விடுவதன் மூலம் peta அமைப்பை ஆதரிக்கும் கார்பொரேட் நிறுவனங்களுக்கு மறைமுகமான எதிர்ப்பு. முடிந்தால் அனைத்து வெளிநாட்டு தயாரிப்பையும் வாங்காமல் தவிர்க்கலாம்.
* இதுவரை இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை எந்த ஒரு அரசியல் கட்சியோ சினிமா பிரபலமோ சொந்தம் கொண்டாட முடியவில்லை. காரணம், போராட்ட இடத்திற்கு வரும் எந்த ஒரு அரசியலாளர் அல்லது நடிகரை முன்னிறுத்தாமல் கூட்டத்தோடு நிறுத்தி, நீங்கள் இவ்வளவுதான் என்று தெரிய படுத்தியது. இனியும் இது போன்றே செயல் படலாம்.
* ஆளும் ஆட்சி(மத்தியோ, மாநிலமோ) நினைத்தால் இந்த பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு காணலாம். மத்தியோ தன் பணம் செல்லாத திட்டம் தோல்வியை டிஜிட்டல் இந்தியா என மாற்றி மக்களை மறக்கடிக்க செய்வதிலும், மாநிலமோ யார் ஆட்சி செய்வது என்ற அடிதடியிலும் மும்முரம் கட்டுதே தவிர மக்களின் அக்கரையில் பெயரளவிலேனும் முயற்சி எடுப்பது போன்ற தோற்றத்தை கூட ஏற்படுத்தவில்லை. என்னை பொறுத்தவரை ராமனும் சரி இல்லை. ராவணனும் சரி இல்லை. எனவே இனி எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு தராமல் விடுவது.
* அன்பு தோழிகளுக்கும் தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள். தங்கள் கணவனோ பிள்ளைகளோ இந்த போராட்டத்திற்கு போக வேண்டும் என்று சொன்னால், ஆதரியுங்கள். சுயநலத்தோடு தடுக்க வேண்டாம். இது நம் பிள்ளைகளுக்கான போராட்டம். அவர்களுக்கான ஒரு எடுத்துக்காட்டு.
இந்த போராட்டத்தின் மூலம் வெற்றி கிட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றால், இனி எந்த ஒரு பிரச்சனைக்கும் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட யோசிக்க மாட்டார்கள்.
இது ஒரு மாற்று. இதில் அடையும் வெற்றி அடுத்து பல விஷயங்களை சாதிக்க போகிறது. உங்கள் பகுதியில் இது போன்றதொரு போராட்டம் நடைபெற்றால் யோசிக்காமல் இறங்குங்கள்.
--சக்திவேல்.

No comments:

Post a Comment